சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு, வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

போக்குவரத்துத்துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர்,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த  3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வுபெற்றவர்களுக்கான பணம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. பொதுவாக,  ஊதிய உயர்வு குறித்து, அரசுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படாமல் இஅருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஆண்டு ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  அப்போது,  25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, மருத்துவ சலுகை வழங்குதல், ஓய்வூதிய நிலுவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று போக்குவரத்து தொழிலாளர்களன் 4வது கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. இதில்,  போக்குவரத்து செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் சுந்தர் தயாளன், ஊதிய பேச்சுவார்த்தை கன்வீனரும், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனருமான அன்பு ஆபிரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொழிற்சங்கத்தின் சார்பில்,  தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் தாடி மா.ராசு, சி.ஐ.டி.யு தொழிற்சங்க செயலாளர் சவுந்தர்ராஜன், ஏ.ஐ.டி.யு.சி. ஆறுமுகம், ஐ.என்.டி.யு.சி. விஷ்ணுபிரசாத உள்ளிட்ட 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது,

போக்குவரத்துத் துறையில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல், பத்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றனர் என்ற கோரிக்கை அதிகமாக முன்வைக்கப்பட்டது. இதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இதில் முதற்கட்டமாக, வரும் 14-ம் தேதி இறந்துபோன போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முதல்வரால் பணி ஆணை வழங்கப்படவுள்ளது.

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு பேட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அது 300 ரூபாயாக வழங்கப்படும்.

மகளிர் இலவச பயணம் செய்கின்ற பேருந்துகளில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு பேட்டா தொகை கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திற்கும் ஒரு நிலையாணை இருப்பதை மாற்றி, அனைத்து போக்குவரத்துக் கழகத்திற்குமான பொது நிலையாணை கொண்டு வரவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பணியாளர்களுக்கு 15 பல்வேறு வகையான படிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து கணக்கெடுப்பு நடத்தி, பதவி உயர்வு வழங்கப்படும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வேண்டும் என்ற கோரிக்கை ஓய்வுபெற்றோர் சங்கம், மற்றும் தற்போது நடைபெற்ற தொழிற்சங்க பேச்சுவார்த்தை யின் மூலம் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டு, ஜூன் மாதத்துடன் டெண்டர் முடிவடைகிற சூழலில் இருப்பதால், புதிய டெண்டர் கோரப்பட்டு, அதில் தொழிலாளர்களுக்கு சாதகமான முடிவெடுக்கப்படும்.

சம்பள உயர்வு குறித்து கடந்தமுறை நடந்த பேச்சுவார்த்தையில் இடைக்கால நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கியிருந்தார்கள். தற்போது அதில் 8 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வைத்திருந்த கோரிக்கையில், தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக, கடந்த 1.9.2019-லிருந்து 2 சதவீத உயர்வும், 1.1.2022-லிருந்து அடுத்தகட்ட 3 சதவீத உயர்வும் என மொத்தமாக 5 சதவீதம் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பேச்சுவார்த்தையின்போது சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இல்லாமல், சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டி ருக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெரும்பாலான சங்கங்கள் வைத்துள்ளனர். இதுதொடர்பாக நிதித்துறையுடன் கலந்தாலோசித்து, தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.