தனியார் வாகனங்களில் உள்ள வாகன பதிவெண் தகடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பலரும் தங்கள் வாகனத்தில் பத்திரிக்கை, தலைமைச் செயலகம், போலீஸ், மின்துறை, டி.என்.இ.பி., சென்னை மாநகராட்சி, ஜி.சி.சி., மற்றும் ராணுவத்தினர் தங்கள் துறையைக் குறிக்கும் சின்னங்கள் ஆகியவற்றை தங்கள் வாகன நம்பர் பிளேட்டிலும் வாகனத்தின் வேறு பகுதியிலும் ஒட்டுகின்றனர்.

அரசாங்க தொடர்புடைய சின்னங்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

மேலும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்களும் இதனை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதை அடுத்து இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்ட தடைவிதிக்கப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

தவிர, அரசியல் கட்சி சின்னங்கள், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற குறியீடுகளும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்ற ஸ்டிக்கர்களை நீக்க மே 1ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ள காவல்துறையினர் மே 2ம் தேதி முதல் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.