டெல்லி:

வியாபம் முறைகேடு வழக்கில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிக்கு தேர்வான 121 மாணவர்களை சிபிஐ அடையாளம் கண்டுள்ளது.

ஹிந்தியில் வியாபம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்தியபிரதேச மாநில தொழில்கல்வி தேர்வு வாரியம் கடந்த 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் மருத்துவ நுழைவுத் தேர்வும், முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வும் நடத்தியது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்த பலரது புகைப்படங்கள் போலியானவையாக இருந்தன. மேலும் இந்த தேர்வில் ஆள்மாறாட்டமும் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து எழுந்த புகாரைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 40 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை கடந்த 2015 ம் ஆண்டு சிபிஐ நியமித்தது.

அதன்பின்னர் டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம்,பீஹார்,மஹாராஷ்ட்ரா, மற்றும் ராஜஸ்தான் மருத்துவகல்லூரிகளில் படித்து வரும் ஒன்பதரை லட்சம் மாணவர்களின் புகைப்படங்களை சிபிஐ யின் சிறப்பு விசாரணைக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.
கடந்த சில மாதங்களில் ஒன்பதரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்ததாகவும், அதில் 121 போலி மாணவர்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் சிபிஐ தெரிவித்தது. அவர்களில் 73 பேரிடம் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் 20 பேருக்கு விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்ப பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் சிபிஐ வட்டாரம், மீதமிருக்கும் 28 பேர் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறியுள்ளது.