குளியலறை பார்வையை நாட்டு நிர்வாகம் மீது திருப்புங்கள்…..மோடி மீது சிவசேனா தாக்கு

Must read

மும்பை:

மும்பையில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு பாஜ -சிவசேனா கூட்டணி முறிந்துவிட்டது. இதனால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.

கூட்டணி முறிவு ஏற்பட்டது முதல் பாஜ.வை சிவசேனா க டுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் பாஜ, பிரதமர் மோடி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

‘‘மற்றவர்கள் குளியலறையை எட்டி பார்ப்பதை நிறுத்திவிட்டு நாட்டின் நிர்வாகத்தில் மோடி கவனம் செலுத்த வேண்டும். எதிர்கட்சிகளின் ஜாதகத்தை கிளறி அதை தூக்கி கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும். உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசுகையில், எதிர்கட்சிகள் மற்றும் முதல்வர் அகிலேஷ்யாதவ் ஆகியோரின் ஜாதகங்கள் இன்டர்நெட்டில் இலவசமாக கிடை க்கிறது என்று மோடி பேசியுள்ளார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘‘இது தரம் தாழ்ந்த விமர்சனம். குறைந்தபட்சம் இதுபோன்ற சேற்றை வாரி இறைக்கும் செயல்களில் பிரதமர், முதல்வர் போன்றோர் மட்டுமாவது விதிவிலக்காக இருக்க வேண்டும். இந்த நாற்காலிகளுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அந்த நாற்காலியில் உட்காருபவர்கள் அந்த கன்னியத்தை காக்க வேண்டும்’’ என்று கடிந்துகொண்டுள்ளது.

மேலும், அதில், ‘‘உ.பி தேர்தலில் என்ன நடக்க வேண்டுமோ அது தான் நடக்க போகிறது. பிரதமர் டெல்லியில் கவனம் செலுத்த வேண்டும். அந்தந்த மாநில முதல்வர்கள் மாநிலத்தில் கவனம் செலுத்துவார்கள். ஒருவர் மற்றொருவரின் கழிப்பிடத்தை எட்டி பார் க்க கூடாது. இதை தவிர்க்க வேண்டும். ஆனால் இதெல்லாம் வெளிப்படையாக நடக்கிறது. பிரதமர், முதல்வர் தேர்தல் பிரச்சரத்தில் சவால் விடுகிறார்கள். மிரட்டுகிறார்கள். அறிவிப்புகளும், வாக்குறுதிகளையும் வாரி வழங்குகிறார்கள். எந்த சட்ட விதிகளின் படி அவர்கள் இதை செய்வார்கள் என்பது தெரியவில்லை’’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

‘‘ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் எதிர்கட்சிகளின் ஜாதகம் உங்கள் கையில் இருக்கலாம். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தான் இந்த ஜாதகத்தை கைப்பற்றியிருப்பீர்கள், நீங்கள் இதை செய்வதற்காக மக்கள் உங்களை ஆட்சிக்கு கொண்டு வரவில்லை. ஆட்சியில் இருந்து நீங்கள் இறங்கிவிட்டால் அப்புறம் உங்கள் ஜாதகம் வெற்றி பெற்றவர் கைகளில் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘‘உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அங்கு வெற்றி பெற்ற பாஜ எம்.பி.க்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்’’ என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

சாமனாவில் வெளிவந்த இந்த தலையங்கத்துக்கு முன்னதாக சிவசேனா தலைவர் உத்தரவ் தாக்கரே மும்பையில் நடந்த ஒரு பேரணியில் பேசுகையில்,‘‘ நான் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை. ஆனால் அவர்கள் எதோ சில வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போதுள்ள ஆட்சியாளர் செய்துள்ள எதை தங்களது பலமாக எடுத்துக் கொள்வார்கள்’’ என்று கேள்வி எழுப்பினார்.

‘‘ரூபாய் நோட்டை தடை செய்துள்ளீர்கள். அதனால், இது பாஜ.வை தடை செய்யும் நேரம். 5 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு வீரர் உயிருடன் இருக்கிறார். ஆனால் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது எங்களின் ஆதங்கம். இந்த திட்டத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால் தான் இதை எதிர்க்கிறோம்’’ என்றார்.

‘‘பாகிஸ்தானில் நடந்த சர்ஜிக்கல் தாக்குதலை சாதனையாக இந்த அரசு கூறுகிறது. முதலில் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய குற்றத்திற்கு இவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த தேர்தல் தான் எங்களுக்கு எதிரிகள் இல்லாத முதல் தேர்தல்’’ என்றும் உத்தவ்தாக்கரே தெரிவித்துள்ளார்.

More articles

Latest article