காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் தனது தமிழக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார், அப்போது அவர் கொங்கு மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தேர்தல் சுற்றுப்பயணத்தின் இடையே ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் தமிழக உணவு வகைகளை பொதுமக்களுடன் அமர்ந்து ருசித்து சாப்பிட்டார்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனல் எனும் யூ-டியூப் சேனலை நடத்தி வரும் குழுவினருடன் உணவு சமைக்க விருப்பம் தெரிவித்திருந்தார் ராகுல் காந்தி.

பொதுவாக, தாங்கள் சமைப்பதை வீடியோ-வாக எடுத்து யூ-டியூப் சேனலில் வெளியிடும் இவர்கள், சமைத்த உணவை ஏழை எளியோருக்கு வழங்கி வந்தனர், இதனை அறிந்த ராகுல் காந்தி, அவர்களை உற்சாக படுத்தும் விதமாக அவர்களுடன் கலந்து கொண்டார்.

இவர்களுடன் ராகுல் காந்தி கலந்து கொண்டு சமையல் செய்தது, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டது, அவர்களுடன் உரையாடியது என வீடியோ-வாக நேற்று அவர்கள் சேனலில் வெளியிட்டனர், இந்த வீடியோ வைரலானது.

இதனை தொடர்ந்து, இவர்கள் ராகுல் காந்தியுடனான தங்கள் அனுபவங்களை செய்தி நிறுவனங்களுக்கு பகிர்ந்தனர். அப்போது அவர்கள் கூறியது :

ராகுல் காந்தி வருவாரா என்ற சந்தேகம் எங்களுக்கு கடைசி வரை இருந்தது, வந்ததும் நாட்டின் மிக முக்கிய நபருடன் இருந்தது எங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.

எங்களுடன், அவர் சகஜமாக ஒரு நண்பரை போல் பழகியது எங்களின் பயத்தை போக்கியதோடு, ‘வெங்காயம்’, ‘தயிர்’, ‘கல் உப்பு’ போன்ற வார்த்தைகளை உள்வாங்கி, அப்படியே உச்சரித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினர்.

மேலும், அவர் அடுத்த முறை வரும்போது ஈசல் சமைத்து தரும்படி எங்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டது எங்களை நெகிழ செய்தது என்று பெருமைப்பட பேசினார்கள்.