கமல் நடிப்பில் ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் இன்று 25 வது நாளை எட்டியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

போதை மருந்து, கொள்ளை, கடத்தல் என்று ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பல திருப்பங்களுடன் சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த படம் கமல் ரசிகர்களிடம் மட்டுமன்றி தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததுடன் சமீபகாலமாக மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட படங்களுக்கு இருந்த வரவேற்பையும் தாண்டி கமலின் விக்ரம் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று வரை மொத்தம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து 400 கோடி கிளப்பில் இணைந்திருக்கும் இந்தப் படம் மேலும் இரண்டு வாரங்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடும் என்று திரை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கமலின் விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாத அளவு வசூலை அள்ளித்தந்திருப்பது அவரது திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவே மாறியுள்ளது.