சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்து உள்ளார்.

நடிகர் விஜய் தனது கடைசி படம் என அறிவித்து நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் ராணுவம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி, தணிக்கை வாரியம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக படத்துக்கு சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, படத்துக்கு உடனடியாக சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய பட தயாரிப்பு தரப்பு, தனி நீதிபதியின் முன் நிலுவையில் இருந்த வழக்கை திரும்பப் பெற்றது. தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் ஆய்வின்கீழ் படம் இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் விவகாரம்
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கப்பெறாததால் இத்திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த வாரத்தில் இந்த படம் இணையத்தில் கசிந்து திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ராசி என்ற உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் கடந்த 11ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, கேபிள் டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]