சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலமானஇ,2001 – 2006 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்து குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில், இந்த மனு தாக்கல் செய்துள்ள விவரத்தை தெரிவித்தும், தூத்துக்குடி நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். மேலும், தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
[youtube-feed feed=1]