திருவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோவிலும் ஒன்றாகும். நவதிருப்பதியில் இது 2-வது திருப்பதி. வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் இந்தத் திருக்கோவில், நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தலம் ஆகும். வரகுணமங்கை என்று சொல்லுவதை விட, ‘நத்தம் கோவில்’ என்று கேட்டாலே பொதுமக்கள் எளிதில் அடையாளம் காட்டுகிறார்கள்.

வரகுணவல்லி, வரகுணமங்கை என்ற இரு தாயார்கள் பெருமாளுடன் உள்ள தலம் இதுவாகும். அவர் பெயராலேயே ஸ்ரீ வரகுணமங்கை என்று ஊருக்கு பெயர் அமைந்துள்ளது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் தலம் இது. அதுவும் ஒரே ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார். அக்னிக்கு இந்தப் பெருமாள் காட்சி தந்து அருள்புரிந்த தலம். தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இரு தீர்த்தங்களைக் கொண்ட தலம். இந்தத் தலத்தில் பெருமாள் விஜயகோடி விமானத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் அமர்ந்து அருள்புரிகிறார்.

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் ஏலக்காய் மாலை சமர்ப்பித்து வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசியில் 5 நாள் தெப்ப உற்சவம், திருக்கார்த்திகை, தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசியில் நடைபெறும் 11 நாள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.