தமிழ் திரைத்துறையில் ஃபெப்சி அமைப்பு இல்லாமல் ஒரு திரைப்படம் கூட உருவாக முடியாது . இதில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்குமே ஒரு நாள் படப்பிடிப்பு நடந்தால் தான் வருமானமே வரும்.

வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு மேக்கப் போடும் தொழிலாளர் ஒரு நாள் வேலை இழப்பைச் சந்தித்தாலும் வாடகை கொடுக்க முடியாத சூழல் உருவாகும்.

இப்படிப்பட்ட தொழிலாளர்கள் இணைந்த பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் செல்வமணி பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார்.

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது பையனூர் பக்கத்தில் பல ஏக்கர் நிலத்தை திரைத்துறையினருக்காகக் கொடுக்க அரசாணை பிறப்பித்தார். அந்த இடத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக வீடு கட்ட பல முயற்சிகள் எடுத்தும் அது நடக்கவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

இதற்காக விஜய் சேதுபதியைச் சந்தித்துப் பேசியதும் அவர் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். தற்போது அதை நிறைவேற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கான விழா சென்னையில் நடந்தது.