மும்பை

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்  நடிகர் ரவி கிஷன் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். 

ரவி கிஷன் போஜ்புரி பட நடிகராக இருந்து அரசியலில் இணைந்தவர் ஆவார்.  இவர் கோரக்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.  மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. சார்பில் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இவருக்கு எதிராக அபர்ணா தாக்குர் என்ற பெண், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, நான் ரவி கிஷனின் 2-வது மனைவி. எங்கள் இருவருக்கும் ஷின்னோவா என்ற பெண் குழந்தை உள்ளது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதற்கு ரவி கிஷனின் மனைவி பிரீத்தி மறுப்பு தெரிவித்ததுடன், அவர் அபர்ணாவின் கணவர் பெயர் ராஜேஷ் சோனி என்றும், வரவுள்ள மக்களவை தேர்தலில், தன்னுடைய கணவரைக் குற்ற வழக்குகளில் பொய்யாக சிக்க வைப்பதற்கான வேலையில் அபர்ணா ஈடுபடுகிறார் என்றும் குற்றச்சாட்டாகக் கூறினார். மேலும் ரூ.20 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

அபர்ணாவின் மகள் நடிகை ஷின்னோவா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். ரவி கிஷன் தன்னுடைய உண்மையான தந்தை என்றும், இந்த வழக்கில் மரபணு பரிசோதனை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தன்னையும், தன்னுடைய தாயாரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவர் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.