லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் , ஷிவானி நாராயணன் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சண்டைப் பயிற்சிக்கு இரட்டையர்களாக அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

கமலுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார். அதன்படி, பிக்பாஸ் பிரபலம் சாண்டி, விக்ரம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக நடைபெற்று வரும் உலகநாயகனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.