துணைவேந்தர் பதவி ரூ.30 கோடி: கவர்னருக்கு அன்புமணி புகார் கடிதம்!

Must read

சென்னை,

மிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக்கு,  வேந்தர்கள்  நியமனம் செய்யப்படுவது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துளாளர்.

மேலும் துணைவேந்தர் பதவிக்கு ரூ.5 கோடி முதல் 30 கோடி வரை லஞ்சம் பெறப்படுவதாகவும் புகார் கூறி உள்ளார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு பாம.க இளைஞர் அணி செயலாளரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

 

தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான ஒரு முக்கியப் பிரச்சினையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சியை மட்டுமே ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களும், தேர்வும் தொடர்ந்து சர்ச்சைக்கு உரியவையாக மாறி வருகின்றன. தமிழகத்தின் இரு முக்கியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட தேர்வுக்குழுக்கள் தவறானவர்களின் தலைமையில் சிக்கித் தவிப்பது கவலையளிக்கிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் கடந்த 18.04.2015 அன்று ஓய்வு பெற்றதால், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கடந்த 06.04.2015 அன்று அமைக்கப்பட்டது. தேர்வுக்குழுவின் அமைப்பாளராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சி.முருகதாஸ் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய துணைவேந்தர் பதவிக்கு தகுதி உள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரி விளம்பரம் வெளியிடப்பட்டது.

அதில் கல்வி மற்றும் அனுபவத் தகுதிகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாக இருந்தது சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட தகுதிகளுடன் புதிய விளம்பரம் வெளியிடப்பட்டது. அதிலும் பல குழப்பங்கள் இருந்த போதிலும், துணைவேந்தர் தேர்வுப்பணிகள் தொடர்ந்தன.

ஆனால், தேர்வுக்குழுவின் அமைப்பாளரான சி.முருகதாஸ் சட்டவிரோதமாக பலரின் விண்ணப்பங்களை திணித்ததற்கு தேர்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில் தேர்வுகுழுவின்  முறைகேடான செயல்பாடுகளை கண்டித்து தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் மு.இராமசாமி 11.02.2016 அன்று  விலகினார்.

அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் துணைவேந்தர் தேர்வு நடைமுறையை புதிதாக தொடங்க ஆணையிட்டது.  W.P. Nos.22565 & 22566 of 2015   என்ற வழக்கு எண்களைக் கொண்ட அந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 06.04.2016 அன்று அளித்த தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

‘‘A development which is crucial in the given facts of the case is that one of the Members of the Selection Committee subsequently withdrew from the Selection Committee.  Thus, the selection process would have to begin de novo. We could have left the matter at that, but then it was felt that the issue is of such a nature that it would again arise for consideration, as it is a question of a principle.’’

தேர்வுக்குழுவின் அமைப்பாளரான பேராசிரியர் முருகதாசின் முறைகேடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதால், அவரை நீக்கி விட்டுத் தான் புதிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 20.12.2016 அன்று தமிழக அரசு அறிவித்த தேர்வுக்குழுவில் பேராசிரியர் முருகதாசின் பெயர் இடம் பெற்றிருந்ததுடன், அவரே அமைப்பாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊழல் மற்றும் முறைகேடு புகாருக்கு உள்ளான ஒருவரையே துணைவேந்தர் தேர்வுக் குழுவின் அமைப்பாளராக, அதுவும் ஆளுனரான உங்களின் பிரதிநிதியாக தமிழக அரசு நியமித்ததை புரிந்து கொள்ள முடியவில்லை.

துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்படுவர் அப்பழுக்கில்லாத பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால், பேராசிரியர் முருகதாசின் பின்னணி அப்படிப்பட்டது அல்ல. முருகதாஸ் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியராக இருந்த போது, அவரது வழிகாட்டுதலின் கீழ் தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஊழல் புகார்களின் அடிப்படையில் பதவி நீக்கப்பட்ட  ராமமோகன் ராவ் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.

ராமமோகன் ராவின் ஆதரவு இருந்ததால் ஒரே நேரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் துணைவேந்தர் தேர்வுக்குழுக்களில் முருகதாஸ் அமைப்பாளராகவும், உறுப்பின ராகவும் நியமிக்கப்பட்டார். இவர் இடம்பெற்ற  தேர்வுக் குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட திருவள்ளுவர், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கல்வி மற்றும் அனுபவத் தகுதிகள் குறித்து கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான சர்ச்சைகள் எழுந்தன.

ஊழல் புகார்களின் காரணமாக பதவி நீக்கப்பட்ட இராமமோகன் ராவுடன் நெருக்கமாக இருப்ப துடன்,  ஏராளமான முறைகேடு புகார்களுக்கும் ஆளான பேராசிரியர் முருகதாசிடம் பெருமையும், பாரம்பரியமும் மிக்க காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒப்படைப்பது சரியான செயலாக இருக்காது.

அவரால் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர் நிச்சயமாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பெருமையையும், பாரம்பரி யத்தையும் பாதுகாப்பவராக இருக்கமாட்டார் என்ற ஐயம் நிலவுகிறது.

அதேபோல், மற்றொரு பெருமை மிக்க நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பாஸ்கரனும் அப்பழுக்கற்ற கடந்த காலத்துக்கு சொந்தக்காரர் இல்லை. இவர் மீதும் ஏராளமான முறைகேடு மற்றும் ஊழல் புகார்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி, எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கெஞ்சிய துணைவேந்தர்கள் குழுவிலும் பாஸ்கரன் இடம் பெற்றிருந்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், அவருக்குப் பதில் அதன் பதிவாளரான கணேசன் சசிகலாவை சந்திக்கும் குழுவின் இடம் பெற வேண்டும் என பாஸ்கரன் வாய்மொழி ஆணை பிறப்பித்துள்ளார்.

இதை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கடந்த 21.12.2016 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் உறுதி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணி கொண்ட பாஸ்கரன் தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்படும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரும் தகுதியானவராக இருக்கமாட்டார்.

மாறாக சசிகலாவை  அரசியலுக்கு அழைத்த தகுதி குறைவான செயலை செய்த துணைவேந்தர்க ளுக்கு இணையானவராகத் தான் இருப்பார்.

துணைவேந்தர்கள் நியமனத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.30 கோடி வரை லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ள நிலையில், துணைவேந்தர்கள் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டியது ஆளூனரின் கடமையாகும்.

எனவே, காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பாளர் பதவியிலிருந்து பேராசிரியர் முருகதாசையும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பாளர் பதவியிலிருந்து பேராசிரியர் பாஸ்கரனையும் நீக்கி தமிழக ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ் அவர்கள் ஆணையிட வேண்டும்.

அவர்களுக்கு பதிலாக அப்பழுக்கற்ற கடந்த காலத்தையும், வலிமையான கல்விப் பின்னணியை யும் கொண்டவர்களை தேர்வுக்குழு அமைப்பாளர்களாக  நியமிக்க வேண்டும் என்று மேதகு ஆளுனராகிய தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article