சென்னை: காயமடைந்த தெருநாய்களை காப்பாற்றி  வீட்டில் வளர்ந்து வந்த  வேளச்சேரி நபரிடம் இருந்து 140 நாய்களை சென்னை மாநகராட்சி மீட்டெடுத்து உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்தில், வேளச்சேரியில்  பகுதியில் ஒருவர் (ஹேமலதா)  வீட்டில் அதிக அளவில் நாய் வளர்ப்பதாக புகார்கள் வந்தன. அவரது வீடு அருகே  குடியிருப்பவர்கள் புகார்கள் அளித்தனர். இதையடுத்து அவர் அவ்வப்போது வீடுகளை மாற்றி வந்தார். தற்போது, அந்த நபர் வேளச்சேரி பகுதியில் உள்ள ஆண்டாள் அவென்யு பகுதியில் ஏராளமான நாய்களுடன் வசித்து வருகிறார்.
இதுதொடர்பான  விசாரணையில்,   ந்த நபர் காயமடைந்து உயிருக்கு போராடும் நாய்களை தூக்கி வந்து, அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி வந்தது தெரிய வந்தது.  இதனால், அந்த நாய்கள் அவருடனேயே வசிக்கத் தொடங்கி ஆரம்பக்கட்டத்தில் ஓரிரு நாய்கள் இவ்வாறு அவருடன் வசித்து வந்த நிலையில், நாளடைவில் அது மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கியது. தற்போது 100க்கும் மேற்பட்ட நாய்கள் அவருடன் வசித்து வருகிறது. இந்த நாய்களால் அக்கம் பக்கத்தினர் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தினர்.
 இதுதொடர்பாக மாநகராட்சிக்கு புகார் அளித்ததுடன் வேளச்சேரி ஆண்டாள் அவென்யு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் வழக்கும்  தொடரப்பட்டன.  மனுவில்,  சம்பந்தப்பட்ட நபர் வளர்க்கும்  நாய்கள் எழுப்பும் ஒலியால், அண்டை வீட்டாரின் துாக்கம் கெடுவதோடு, சுகாதார பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறோம். வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி நாய்கள் தெருவுக்கு வருவதால், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் முதியோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நாய்களின் குரைப்பால் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே, நாய்களை வேறு இடத்துக்கு மாற்ற, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.
இந்த மனுவுக்கு பதிலளித்த ,  அந்த நபர், முறையாக நாய்களை பராமரித்து வருகிறேன்; நாட்டு நாய்களான அவை வெளியில் செல்ல முடியாத வகையில், சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. நாய்களை வேறு இடத்துக்கு மாற்ற முடியாது’ என கூறியிருந்தார். இந்த மனு நிலவையில் இருந்து வந்த நிலையில், தற்போது நடைபெற்ற விசாரணகளைத் தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்து அனைத்து  நாய்களையும்  அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.  சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 140 நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி நாய்கள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.