சென்னை: தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் பிரபல கட்டுமான நிறுவனமான  ‘ஜிஸ்கொயர்’ கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ‘ஜிஸ்கொயர்’ கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெறுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ஜிஸ்கொயர் என்ற பெயரிலான கட்டுமான நிறுவனம் அதிவேகமாக வளர்ந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருப்பதால், இது சலசலப்பை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம்  தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள், தி.மு.க பிரமுகர்களின் சொத்துப் பட்டியல் எனக் கூறி சில தரவுகளை வெளியிட்டார்.  இந்த  சொத்துப் பட்டியலில் `ஜி ஸ்கொயர் நிறுவனம்’ பற்றிய விவரத்தில், Residential Plots – ரூ.24,006.07 கோடி, Commercial Plots – ரூ.11,714.52 கோடி, Build To Suit – ரூ.3,112.1 கோடி என ஆக மொத்தம் – ரூ.38,827.70 கோடி ஜி ஸ்கொயர் சொத்து மதிப்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. ஜிஸ்கொயர் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள திமுக பிரமுகரான  அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகன் இல்லத்தில் ரெய்டு  நடத்தப்பட்டது.  அதில் கிடைக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு, `ஜி ஸ்கொயர்’ நிறுவனம் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வருமான வரி செலுத்துவதில் மோசடி செய்ததாகவும் கூறி, வருமான வரிதுதற  `ஜி ஸ்கொயர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான, தொடர்புடைய சென்னையில், அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, திருச்சி, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில், பெங்களூர், மைசூர், பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் என மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும்  G Square நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள G Square தலைமை அலுவலகம் உட்பட 10 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.