டில்லி

டில்லி நகர் மாசடைவதைக் குறைக்க 20203 ஆம் வருடத்துக்குள் டில்லியில் உள்ள வாகனங்களில் 50% மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என டில்லி அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக டில்லியில்  காற்று மாசு பொதுமக்களின் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு பெரும் பிரச்சினையாகியுள்ளது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் அவதிப்படுகின்றனர்.   பல்வேறு நடவடிக்கைகள் மூலம் டில்லி மாநில அரசு காற்று மாசை கட்டுப்படுத்த முயன்று வருகிறது.  அதில் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக மின்சார வாகனங்களுக்குச் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது.

மேலும் ஆன்லைனில் பதிவு செய்து பயணிக்கும் வாடகை வாகனங்கள், டெலிவரி வாகனங்களுக்கான புதிய வரைவு கொள்கையையும் உருவாக்கியுள்ளது.  இந்த இறுதிக் கொள்கை அறிவிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் அத்தகைய நிறுவனங்கள் புதிதாக இணைக்கும் இரு சக்கர வாகனங்களில் 10 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களில் 5 சதவீதமும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

டில்லி மாநில சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், ”வரும் மார்ச் 2023க்குள் மின்சார வாகன எண்ணிக்கையானது இருசக்கர வாகனங்களில் 50 சதவீதமாகவும், நான்கு சக்கர வாகனங்களில் 25 சதவீதமாகவும் இருக்க வேண்டும்.  டில்லியில் காற்று மாசாவதை  எதிர்த்துப் போராட இந்த புதிய கொள்கை வலுவான முயற்சி ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.