வந்தே பாரத் ரயில் இதுவரை எத்தனை முறை கால்நடைகள் மற்றும் விலங்குகள் மீது மோதியிருக்கிறது ? தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து உதிரிபாகங்கள் வழங்கிய நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்றதா ? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

திமுக-வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ. ராஜா எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா பதிலளித்துள்ளார்.

அதில், 2022 ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் இதுவரை 68 முறை கால்நடைகள் மற்றும் விலங்குகள் மீது மோதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரயிலின் அனைத்து உதிரிபாகங்களும் தர சோதனைக்கு பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ரயிலின் வேகம் காரணமாக ஏற்படும் காற்றின் அழுத்தத்தை தாங்கும் வகையில் முகப்பில் ஃபைபர் ரீஇன்போர்ஸ் பிளாஸ்டிக் மூலம் மூக்கு போன்ற பகுதி வடிவமைக்கப்பட்டதாகவும், மேலும் இதனால் ரயிலின் மீது எதுவும் மோதாமல் தவிர்க்கவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உதிரி பாகங்கள் அனைத்தும் முன்னரே தரநிர்ணயம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், அவ்வாறு தயாரித்த பொருட்கள் தரக்கட்டுப்பாடு சோதனைக்குப் பிறகே வாங்கப்பட்டதால் இதில் தவறு ஏதும் நிகழ வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

தரமற்ற உதிரிபாகங்கள் கொடுத்தது தெரியவந்தால் அந்த நிறுவனங்கள் மீது ஒப்பந்த சரத்து அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.