சென்னை,

ண்டாள் குறித்து வைரமுத்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன் காரணமாக வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ள நிலையிலும் சில இந்து அமைப்பினர் தொடர்ந்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படாமல் இருக்க வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வைரமுத்து அவர்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து சம்பந்தமாக, உண்மையான தமிழ் அறிஞர்கள், நல்லவர்கள், வல்லவர்கள், நேரிலோ, தொலைபேசியிலோ, சமூக ஊடகத்தின் மூலமாகவோ, பத்திரிகை அறிக்கையின் வாயிலாகவோ தங்களின் கருத்தினைத் தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

வைரமுத்து அவர்கள், ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறி, இதனை பக்தர்கள் ஏற்க முடியாவிட்டா லும், பகுத்தறிவாளர்கள், சிந்தனையாளர்கள் உலகம் ஏற்கும் என்று பேசியதை அடுத்து கடந்த 10 நாட்களாக தமிழகம் எங்கும் பொதுமக்கள் பெரும் அளவில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டமென வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என 16 பேர், யாருடைய அழுத்தத்தின் காரணமாகவோ வைரமுத்துவிற்கு ஆதரவு என ஓர் அறிக்கையை நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அது எப்படியாக இருந்தாலும், அந்த அறிக்கையில் சைவ குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை நூலை, ஆண்டாள் எழுதியதாக குறிப்பிட்டுள்ளதைக்கூட புரிந்துகொள்ளாத இவர்கள், வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதை, எழுதியதை புரிந்துகொண்டார்களா? என்ற கேள்வி எழுகிறது.

இதில், கையொப்பமிட்டவர்களில் பலர் இடதுசாரி, கிறிஸ்தவ, இஸ்லாம் ஆதரவாளர்கள், அவர்கள் இந்து விரோத கருத்தினை எப்போதும் பேசுகின்ற எழுத்தாளர்கள். நடுநிலையான சிலர், அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக அவ்வறிக்கையில் கையெழுத்திட்டிருக்கலாம். இது குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உண்மையான தமிழ் அறிஞர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் தங்களின் கருத்தினை மக்களுக்குத் தெரிவித்து, இந்து விரோத கருத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக நல்வினை ஆற்றிட கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர்களின் இந்தப் போராட்டத்திலிருந்து தன்னை காப்பாற்ற, வைரமுத்து பல பிரபலங்களையும் கெஞ்சியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. காரணம், சமயத்திற்கு அப்பாற்பட்டு, ஒட்டுமொத்த இந்து சமுதாயமும், தானாக முன்வந்து தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறது.

வைரமுத்து, யாரோ கூறியதாக பதிவு செய்த நஞ்சை கக்கும் கருத்திற்கு மன்னிப்பு கேட்கவே கோருகிறது! ஆனால், மக்கள் தானாக இணைந்து, தங்களது எதிர்ப்பை அமைதியான வழியில் தெரிவிப்பது, ஜனநாயக விரோதம் என்று இந்த கருத்துரிமையாளர்கள் கூறிப்பிடுவது நகைப்பிற்குரியது.

தங்களது கருத்துக்கு எதிரானவர்கள் வீட்டின் மீது கல்லெறிதல், பெட்ரோல் பாம் போடுதல், சாலை மறியல் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்றவற்றை, இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரிகள், திராவிட கழகத்தினர் ஆகியோர் நடத்தியபோது, இந்த அறிவுஜீவிகள் எங்கு போயிருந்தனர்?

அதுதான் உண்மையான ஜனநாயக வழிமுறை எனத் தமிழர்களுக்கு எடுத்துக்கூறுகிறார்களோ? இன்று இந்துக்கள் விழிப்படைந்து விட்டார்கள், தங்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் யார்?

நமது நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துபவர்களுக்கு எந்த மொழியில் பதில் அளிக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்துள்ளார்கள்! எனவே, இனி இந்த பிரித்தாளும் ஆங்கிலேயனின் சூழ்ச்சி இங்கு பலிக்காது.

வைரமுத்துவை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சுவாமிகள் உண்ணா நோன்பு போராட்டத்தைத் துவக்கியுள்ளார். ஒரு துறவி துன்பப்பட்டால், அந்த மாநிலம் பெரிதும் பாதிக்கப்படும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

மீண்டும் ஒரு சுனாமியோ, பேரழிவோ ஏற்படாமல் இருக்க, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வைரமுத்து அவர்கள், தான் கூறிய அபாண்டமான பொய் செய்திக்கு நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவ்வாறு அவர் செய்யவில்லை என்றால், திட்டமிட்டு, சதி செய்து, பொய்யான தகவலை பொது மேடையில் பேசி பக்தர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்திய வைரமுத்துவையும், பொய்யான, மக்களின் மனங்கள் புண்படுத்திடும் அந்த கருத்தை சிரமேற்கொண்டு வெளியிட்ட தினமணி நாளிதழ், மற்றும் அதன் ஆசிரியர் வைத்தியநாதன், வெளியிட்டாளர் ஆகியோர் மீது செய்தி பத்திரிகையின் சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாமதம் படுத்தினால், இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கையை இந்து முன்னணி துவக்கும்.

சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவதால், தமிழக அரசும் அதற்குரிய விலையை கொடுத்தாக வேண்டும் என, திருமகளின் அவதாரமான ஆண்டாள் பிராட்டியாரை சாட்சியாக வைத்து, இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.