சென்னை, 

சென்னை பெரம்பூர் பிருந்தா  தியேட்டர் அருகே உள்ள  தனியார் பள்ளியான டான் பாஸ்கோ பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து,  பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் நரேந்தர்,

பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் நரேந்தர். இவர் அருகிலுள்ள திருவிக நகரை சேர்ந்தவர்.

நேற்று பள்ளிக்கு வந்த நரேந்தரை, தாமதமாக வந்ததாக கூறி, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பள்ளி மைதானத்தை முட்டிப்போட்டு (டக்வாக்)  சுற்றி வரும்படி கூறியதாக சொல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தண்டனையை நிறைவேற்றியபோது, நரேந்தர் மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து அவரை, பள்ளி நிர்வாகத்தினர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் அதற்குள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் சார்பில், நரேந்தரின் தந்தையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நரேந்தர் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டதாகவும், அதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக மருத்துவமனை சென்ற நரேந்தர் உறவினர்கள், அங்கு  நரேந்தர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, நரேந்தரின் தந்தை முரளி, திரு.வி.க நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து இன்று மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவர் சாவுக்கு காரணமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய போலீசார்,  பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. பதிவுகளைப்  ஆய்வு செய்தனர்.

அதையடுத்து,  உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சாமி ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவர் நரேந்தர் சாவு காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.