சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  விதி மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.90 கோடி மதிப்புள்ள பணம், நகைகள்  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற, மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளதை, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பறக்கும் படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, தகுதியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை பணம் மற்றும் பொருட்கள் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட விவரம், கைப்பற்றப்பட்ட பணம் ரூ.3,53,91,443, கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு, அதாவது, 39 மடிக்கணினிகள், 4 ஐபோன்ஸ், காலணிகள், துண்டுகள், சில்க் மற்றும் சிந்தடிக் புடவைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்ட பொருள்களின் மதிப்பு ரூ.1,20,89,390 என தெரிவித்துள்ளது.

மேலும் மதுமான பாட்டில்கள் மதிப்பு ரூ.15,94,965 என தேர்தலை முன்னிட்டு விதி மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.90 கோடி மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.