கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சி வெளியேறியுள்ளது. கூர்க்காக்களின் நம்பிக்கையை பாஜக ஏமாற்றி விட்டது என்று அக்கட்சியின்  ஒருங்கிணைப்பு  தலைவர் எல்.எம்.லாமா தெரிவித்துள்ளார். ஜிஜேஎம் கட்சியுடன் தேர்தல் கூட்டணி மட்டுமே உள்ளது என்று பாஜக தலைவர் திலிப் கோஷ் சமீபத்தில் தெரிவித்ததால் அக்கட்சி மன வருத்தமடைந்துள்ளது.

பினய் தமாங்

இது குறித்து லாமா கூறுகையில், ‘‘ஜிஜேஎம் கட்சியுடன் நட்பு உள்ளது. தே.ஜ.கூட்டணியின் ஒரு அங்கம் என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். கூர்க்காக்களின் கனவு தான் எனது கனவு என்று மோடி தெரிவித்தார். ஆனால், மாநில தலைவரோ தேர்தல் கூட்டணி மட்டும் தான் உள்ளது. அரசியல் தீர்வு தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கூர்க்காக்களிடம் பாஜக நேர்மையாக இல்லை என்பதை காட்டுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக.வுக்கு டார்ஜிலிங் அரசியல் நுழைவாயிலை ஏற்படுத்திக் கொடுத்தது. இது ஜிஜேஎம் மூலம் தான் சாத்தியமானது. 2009, 2014ம் நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக டார்ஜிலிங் தொகுதியில் வெவ்றி பெற்றது. தங்களது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் மக்களின் நம்பிக்கையை பாஜக ஏமாற்றிவிட்டது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘பாஜக.வால் டார்ஜிலிங் அரசியல் தற்போது அமைதியற்ற நிலையில் உள்ளது. 104 நாட்கள நீடித்த பந்த் போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய பாஜக அரசோ அல்லது டார்ஜிலிங் எம்.பி.யோ இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து பந்த் முடிவுக்கு வந்தது. தற்போது 6 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் உள்துறை தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஜிஜேஎம் கட்சி முந்தைய தலைமையின் கீழ் தே.ஜ.கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டது. தற்போதைய பினய் தமாங் தலைமையில் ஜிஜேஎம்.க்கும் தே.ஜ.கூட்டணிக்கும் எவ்வித தொடர்போ அல்லது கூட்டணியோ கிடையாது’’என்றார்.