சண்டிகர்:

பஞ்சாப் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மேன்பிரீட் பாதல்  இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் விவசாயம் மற்றும் சுகாதார நலத் திட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.4,250 கோடி விவசாய பயிர் கடனும், ரூ.180 கோடி கரும்பு விவசாயிகள் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் மொத்தம் ரூ. 90 ஆயிரம் கோடி விவசாய கடன் உள்ளது.

 

கடந்த ஆண்டு விவசாயத்துக்கு ரூ.10,581 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.14,734 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.2,400 கோடி நிதி திரட்டும் வகையில் புதிய மேம்பாட்டு செஸ் திட்டத்தை கேப்டன் அமரீந்தர் சிங் அரசு அறிமுகம் செய்துள்ளது.

மாநில அரசுக்கு கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 978 கோடி ரூபாய் கடன் இருந்தது. இந்த ஆண்டு 2 லட்சத்து 11 ஆயிரத்து 523 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதனால் பஞ்சாப் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

முந்தைய சிரோனமி அகாலி தள், பாஜக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்து தற்போது எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கூறி எதிர்கட்சியான ஆம்ஆத்மி வெளிநடப்பு செய்தது.

பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விபரம்…

# தேசிய சுகாதார திட்டத்துக்கு 20 சதவீத உயர்வுடன் ரூ.914.57 கோடி.

# 13 சதவீத உயர்வுடன் ஆரம்ப மற்றும் இடைநிலை சுகாதார திட்டங்களுக்கு ரூ.4,015 கோடி.

# சமூக பாதுகாப்பு திட்டத்தில் 17 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் ரூ.1,634 கோடி.

# 16 ஆயிரம் கி.மீ., சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி.

# தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.100 கோடி.