சென்னை: உ.பி. படுகொலை ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது என காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட் டத்தில் படுகொலை செய்யப்பட்ட 8 பேர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற முற்பட்ட, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களை உத்தரபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  என்.வி.செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்  ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,

”பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையை விட கடுமையான படுகொலை உத்தரப் பிரதேசத்தில்  நடைபெற்றுள்ளது” என்றும்,  மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகளின் போராட்ட களத்தில் காரை விட்டு 4 விவசாயிகள் கொலை செய்துள்ளார். மொத்தம் 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும்,  ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை நடந்த பிறகு ஆங்கிலேய அரசு காங்கிரஸ் தலைவர்களைப் படுகொலை நடந்த இடத்தை பார்வையிட அனுமதித்தது. இங்கு பலியான விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை அனுமதிக்காமல் கைது செய்துள்ளனர். அப்படி என்றால் ஆங்கிலேய  ஏகாதிபத்தியத்தைவிட மோடியின் ஏகாதிபத்தியம் கடுமையானது, கொடுமையானது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.