சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்குட்பட்ட கிராமமொன்றின் மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் அப்பகுதி வாக்குச்சாவடி வெறிச்சோடியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைந்து உள்ளது. இந்த பகுதிகளில் ஊராட்சி தலைவர்கள் பதவிகள் பல ஆண்டுகளாக ஏலம் விடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய தேர்தலிலும் தலைவர் பதவி ரூ.13 லட்சமும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ. 20 லட்சம் என ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பதவிகளை, துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களே கைப்பற்றி வருகின்றனர்.

இதனால், அதிருப்தி அடைந்த பொண்ணங்குப்பம் ஊராட்சி மக்கள், தங்களது  ஊரை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை தமிழகஅரசு ஏற்க முன்வராததால், அப்பகுதியில் உள்ள 7, 8, 9 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவினை திரும்பப் பெற்றுக் கொண்டனர். தேர்தலை புறக்கணிக்கப் போவதாகஅறிவித்தனர்.

அதன்படி, இன்று வாக்குப்பதிவை பொண்ணங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளது. பெண்ணாங்குப்பத்தில்  1,400 வாக்குகள் உள்ளது.

பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்களால் எவ்வித ஜனநாயக பதவிகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தேர்தலை புறக்கணித்து உள்ளதாக அறிவித்து உளளனர்.  இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.