பிரோஸ்ப்பூர் நகரில் 42,750 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி.

பதின்டா விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைன்வாலாவில் உள்ள தியாகிகள் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திவிட்டு பின்னர் பிரோஸ்ப்பூர் செல்வதாக பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக பதின்டாவில் இருந்து ஹெலிகாப்டர் பயணத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது.

பதின்டா முதல் ஹுசைன்வாலா வரையிலான 120 கிலோமீட்டரை நெருங்க 30 கிலோ மீட்டர் இருந்த நிலையில் பிரதமரின் வாகனம் சென்ற மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்துக்கு இடையூறாக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

15 முதல் 20 நிமிடம் மேம்பாலத்தின் மீது காத்திருந்த பிரதமர் மோடி பின்னர் வேறு வழியின்றி மீண்டும் பதின்டா திரும்பினார்.

பிரதமரின் வாகனம் சென்ற பாதையில் பாதுகாப்பு குறைபாடு குறித்தும், மோசமான வானிலை காரணமாக மாற்று பயண திட்டத்திற்கான ஏற்பாடுகளை முறையாக செய்யாதது குறித்தும் பஞ்சாப் டி.ஜி.பி. மற்றும் தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.