புதுச்சேரி

த்திய அரசு அகில இந்திய வானொலி சேவையை முடக்காது எனவும் சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

வரும் 12ம் தொடங்கி 16ம் தேதி வரை புதுச்சேரியில் தேசிய இளைஞர் தினவிழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நாடு முழுவதுமிருந்து 7,500 இளையோர் பங்கேற்க உள்ளனர்.  இந்நிகழ்வு நடைபெறும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று நேரில் பார்வையிட்டார்.   தொடர்ந்து தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்வில் தேசிய இளைஞர் தினவிழாவுக்கான லோகோ, விழா தூதுவராகப் புதுச்சேரி மாநில விலங்கான அணில் கார்ட்டூன் படங்களைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். புதுச்சேரியில்  இத்திருவிழாவை நடத்துவது பிரதமர் விருப்பம் ஆகும்..  நிகழ்வை தொடங்கி வைப்பதுடன், இளையோரிடம் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

அகில இந்திய வானொலி சேவையை நாங்கள் முடக்கவில்லை, மாறாக விரிவுபடுத்தவே செய்கிறோம். வானொலியில் பிரதமர் உரையாற்றும் “மான் கி பாத்” நிகழ்வைக் கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பதால் தற்போது தொலைப்பேசியில் கேட்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகப் பலப்படுத்தியுள்ளோம்.” என விளக்கம் அளித்துள்ளார்.