இந்து அமைப்புக்களின் மதவாத பேச்சுகள் : பாஜகவுக்கு பின்னடைவு

ஆர். எஸ். எஸ் – பா. ஜ. க.வின் சித்தாந்தங்களில் ஊறி வளர்ந்த வெங்கைய்யா நாயுடு பா. ஜ. க. அமைச்சரவைகளில் முக்கிய துறைகளை வகித்தவர்! தற்போது நாட்டின் உயரிய பதவியான துணைக் குடியரசுத் தலைவர் பதவி வகிக்கும் இவர், அரசியல் மாண்புகளை மதிக்கும் இயல்புகளை உடையவர்!

இச்சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் இந்து அமைப்புகள் சில ஒன்றிணைந்து நடத்திய மாநாட்டில், ” இந்து தர்மத்துக்கு எதிராக இருக்கும் இஸ்லாமியர் களைக் கொல்வதற்கு நாம் வாளேந்த வேண்டும்… ” என்று அதில் கலந்து கொண்ட பலரும் வெறித்தனமாக பேசினர்!

டெல்லி மாநில பா. ஜ. க. வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினர்!

அண்மைக் காலமாக, பா. ஜ. க. அரசின் மக்கள் விரோத அரசுக்கு எதிராக மக்கள் அணி திரண்டு வருகிறார்கள்!

அதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த சில காலமாக பல மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த இடைத் தேர்தல்களில் பா. ஜ. க. கடும் தோல்விகளைச் சந்தித்தது!
இதைத் தொடர்ந்து…..

உ. பி, உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன!

ஆனால், தற்போது உள்ள சூழலில், இங்கெல்லாம் பா. ஜ. க. வுக்குப் பின்னடைவு ஏற்படும் சூழல் இருப்பதாக அக்கட்சி அஞ்சுகிறது!

இச்சூழலில் தான்… பா. ஜ. க.வை எப்படியாவது வெற்றி பெற வைக்கும் நோக்கத்தில் ,எப்படியாவது ‘இந்து’க்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த மாநாட்டில் இப்படி ‘வெறி’த்தனமான பேச்சுகள் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன என்பது எளிதில் ஊகிக்கப்படக் கூடிய ஒன்று!

ஆனால்,” இந்த மதவெறிப் பேச்சுகள் நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது… மற்றும் வன்முறையைத் தூண்டுவதாகவும் இருக்கிறது!முஸ்லிம் மக்களுக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது! எனவே உச்ச நீதி மன்றம் தாமாக முன்வந்து இந்தப் பேச்சுகளைப் பற்றி விசாரிக்க வேண்டும்..” என்று நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள இணைந்து உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி என். வி. ரமணாவுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள்!

மேலும் நமது ராணுவத்தின் முன்னாள் தளபதிகள் ஐந்து பேர் இணைந்து, ” பன்முகத் தன்மை கொண்ட நமது சமூகத்தில், ஒரு பிரிவினருக்கு எதிராக விதைக்கப்படும் வன்முறை.. சீருடை தாங்கிய வீரர்கள், மத்திய ஆயுதப் படையினர், காவல் துறையினர் என அனைவரிடமும் நிலவும் ஒற்றுமையைக் சீர்குலைக்கும்” என்று எச்சரித்து இருக்கிறார்கள்!

இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல, நமது வெங்கய்யா அவர்கள், ” பிற மதங்களைப் பற்றிய வெறுப்புப் பேச்சு களும் பதிவுகளும் நமது கலாச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது! “என்று எச்சரித்து இருக்கிறார்!

இவை எல்லாம் சாதாரணக் கருத்துகள் அல்ல! நாட்டின் ஒருமைப்பாடு சிதறக் கூடாது என்ற நேர்மையான கவலையே இவை!

ஆனால்… மதத் துவேஷம் ஒன்றையே ‘வாக்கு வங்கி’ அரசியலாக வைத்திருக்கும் ‘ சங்கப் பரிவாரங்களுக்கு’ இதெல்லாம் உறைக்குமாா?

*** ஓவியர் இரா. பாரி.