டெல்லி: மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இரு இன மக்களிடையே  கடந்த 3 மாதங்களாக வன்முறை தலைவிரித்தாடுகிறது. அங்கு பெண்கள் பாலியல் துன்புறுத்தப்படுகிறார். இது தொடர்பான வீடியோ வெளியே நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. அங்கு நடக்கும் மனிதத்தன்மையற்ற செயல்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கடந்த  20ந்தேதி ( ஜூலை 20,  2023) அன்று  வெளியான பெண்கள் நிர்வாண ஊர்வலம் தொடர்பான  ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைத்தார். அப்போது,  “மணிப்பூரின்  சம்பவத்தால் என் இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவத்தால் நாட்டின் 140 கோடி மக்களும் அவமானத்திற்கு ஆளாகி யுள்ளார்கள். சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்த மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன், குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம்,” என்றார்.

மேலும், “மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை கூறி, நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,  மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த விடாமல் முடக்கின. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்த வாரம் விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிடா விட்டால், நீதிமன்றம் தலையிடும் என எச்சரித்தார். இதையடுத்து உள்துறை அமைச்சகம் பதில் அளித்தது. இந்த நிலையில், தற்போது  மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரம்மான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், மணிப்பூர் சம்பவம் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றவும், மேலும் இது தொடர்பான விசாரணையை மணிப்பூர் அல்லாத வேறு மாநிலத்துக்கு மாற்றவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் உறுதி அளித்துள்ளது.