டெல்லி: மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையில்,  நாட்டின் மொத்த கடன் ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும் என்றும்; நிதிப்பற்றாக்குறை 6.4 சதவீதமாக குறையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில்,  2022-2023ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த கடன் ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அரசின் நிதிப்பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 6.4 சதவீதமாக குறையும் என்றும் நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

நாட்டின் மூலதன செலவினம் கடந்தாண்டை விட 35.40%ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நுகர்வை அதிகரிக்க, அரசின் மூலதன செலவினத்திற்கு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மேக்இன் இந்தியா திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும். வைரங்கள், ரத்தினங்கள் மீதான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரு நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.
மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்றும், மாநில அரசுகள் ஊழியர்களுக்கு என்.பி.எஸ். பங்களிப்பில் வரி விலக்கு  10% லிருந்து 14% ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது 30 % வரி விதிக்கப்படுகிறது.

வரம்புக்கு மேல் உள்ள மெய்நிகர் சொத்துக்களை மாற்றினால் 1 சதவீதம் டி.டி.எஸ். கழிவு.
புதிதாக இணைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரி சலுகை  இன்னும் 1 வருடத்திற்கு நீட்டிப்பு.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மார்ச் 31, 2023 வரை நீட்டிப்பு.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக, கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரியை 15 சதவீதமாக குறைக்க அரசு முன்மொழிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.