கேரளாவில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3ல் காங்கிரஸ் கூட்டணியும், 2ல் இடதுசாரிகள் முன்னணியும் முன்னிலை வகிக்கின்றன.

கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி, கடும் மழைக்கு நடுவே திரளான அளவில் மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து இடதுசாரிகள் முன்னணியும், காங்கிரஸ் கூட்டணியும் 5 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

வட்டியூர்காவு தொகுதியில் இடதுசாரிகள் முன்னணி 4,700 வாக்குகள் வித்தியாசத்திலும், கோன்னியில் 5,0003 வாக்குகள் வித்தியாசத்திலும் இடதுசாரிகள் முன்னணி முன்னிலை வகிக்கின்றது. சபரிமலை அமைந்துள்ள பந்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த கோன்னி தொகுதியில், இடதுசாரிகள் முன்னணி முன்னிலை வகிக்கும் அதேநேரம், பாஜக 3வது இடத்தில் உள்ளது. 2016ம் ஆண்டு வட்டியூர்காவு தொகுதியில் டெப்பாசிட் இழந்த இடதுசாரி முன்னணி, தற்போது வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

அதைப்போலவே அரூர் தொகுதியில் 2,197 வாக்குகள் வித்தியாசத்திலும், எர்ணாகுளம் தொகுதியில் 3,258 வாக்குகள் வித்தியாசத்திலும், மஞ்சேஸ்வரம் தொகுதியில் 3,323 வாக்குகள் வித்தியாசத்திலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மஞ்சேஸ்வரத்தில் 98 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற பாஜக, தற்போது 2வது இடத்தில் இத்தொகுதியில் தொடர்கிறது.