ண்டிகர்

ரண்டு வயது சிறுவனுக்கு ஒரே பெயர், முகவரி மற்றும் அடையாளங்களுடன் இரு வேறு எண்களில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டதால் எது உண்மை என பெற்றோர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சண்டிகர் நகரில் வசிப்பவர் சைனி.   இவர் ஒரு கல்வி நிறுவனத்தில் துணை பேராசிரியராக பணி ஆற்றி வருகிறார்.   இவரது இரண்டு வயது மகனை பள்ளியில் சேர்க்க இவருக்கு ஆதார் அடையாள அட்டை தேவைப்பட்டிருந்தது.   அதற்காக அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று சண்டிகர் செக்டர் 43ல் அமைந்திருத்த ஆதார் மையத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை பதிந்தார்.  இவருக்கு இதற்காக இவர் மகன் பிரவின் குமார் பெயரில் ஒரு  ஒப்புகை சீட்டு தரப்பட்டது.

அதன் பின் ஒரு மாதம் கழித்து சைனிக்கு ஒரு ஈ மெயில் வந்துள்ளது.   அதில் டேட்டா பிராசஸ் செய்யும் போது நடந்த தவறினால் அனைத்து விவரங்களும் அழிந்து விட்டதாகவும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் எனவும் தகவல் அளிக்கப்பட்டிருந்தது.   அதனால் அவர் தனியார் ஆதார் மையமான அலாங்கித் லிமிடெட் மையத்தில் புதியதாக விவரங்களை பதிந்தார்.   சுமார் 15 தினங்கள் கழித்து அவர் ஆதார் இணைய தளத்தை அணுகியபோது அதில் விவரங்கள் ஏதும் இல்லை என தகவல் வந்தது.

அதன் பின் ஆதார் நிறுவன ஆலோசனைப்படி சைனி மூன்றாவது முறை விவரங்களை பதிந்துள்ளார்.   இம்முறை அவர் கனரா வங்கியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் விவரங்களை அளித்துள்ளார்.   அதன் பிறகு அவருக்கு தபால் மூலம் இரு ஆதார் அட்டைகள் வந்துள்ளன.   இரு அட்டைகளும் பிரவின் குமாரின் பெயரில் அதே முகவரி அதே அங்க அடையாளங்களுடன் ஆனால் இரு வேறு எண்களுடன் வந்துள்ளன.   இதனால் சைனி எந்த அட்டை உண்மையானது எனக் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

இது குறித்து ஆதார் நிறுவனம் இது போல நடப்பது அரிதான நிகழ்வு என்றும் தவறுதலாக ஒரே விவரங்கள் இரு முறை பதிவு செய்திருக்கலாம் எனவும் கூறி உள்ளது.   சைனி, “எனது மகன் ஐந்து வயதுக்குட்பட்டவர் என்பதால் என்னுடைய கைரேகைகள் எடுக்கப்பட்டது.   அப்படி இருக்க எவ்வாறு இரு முறை பதியப்படும்.   மேலும் எனது விவரங்கள் தவறாக கையாளப்படலாம் என அஞ்சுகிறேன்”  எனக் கூறி உள்ளார்.

ஆதார் நிறுவனம் எந்த அட்டையை பிரவின்குமார் உபயோகப்படுத்த வேண்டும் என்பதையும்,  எவ்வாறு இப்படி இரு வேறு அட்டைகள் வழங்கப்பட்டன என்பது குறித்து தெளிவான விளக்கத்தையும் இதுவரை அளிக்க வில்லை.