அகர்தலா: திரிபுரா மாநிலத்திலுள்ள திரிபுரா மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜய்குமார் லஷ்மிகாந்த்ராவ் தரூர்கர், பல்கலை வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏபிவிபி கொடியை ஏற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் எனும் அந்த அமைப்பு, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு மாணவர் அமைப்பாகும்.

இது குறித்து துணைவேந்தர் விஜய்குமார் கூறியுள்ளதாவது, “பல்கலையில் நடந்த அந்த விழா, சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையினுடைய 125ம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது. நான் அதில் அழைப்பின் பேரில் கலந்துகொண்டு கொடியேற்றினேன்.

ஏபிவிபி அமைப்பு என்பது ஒரு தீவிரவாத இயக்கமோ அல்லது தடைசெய்யப்பட்ட இயக்கமோ அல்ல. அது எந்த அரசியல் கட்சியும் சாராத ஒரு அமைப்பு. மேலும், நமது கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது அந்த அமைப்பு.
அந்நிகழ்ச்சியில் மரம் நடுதல் மற்றும் பல்வேறு உரைகளும் இடம்பெற்றிருந்தன. அந்த நிகழ்ச்சி சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை தொடர்பானது.

நான், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளேன். எனவே, ஏபிவிபி அமைப்பின் விழாவில் கலந்துகொண்டதில் எந்த தவறுமில்லை” என்றார்.