ஐதராபாத்: ஐதராபாத் நகரில் பெருகிவரும் சட்டவிரோத மற்றும் விதிமீறல் கட்டுமானங்களை தடுத்து நிறுத்தும் வகையில், தெலுங்கானா மாநில அரசு புதிய முனிசிபல் மசோதாவை கொண்டுவந்துள்ளது.

இதன்மூலம், சட்டவிரோத மற்றும் விதிமீறல் கட்டடங்களை கட்டுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இடம்/கட்டட மதிப்பில் 25% அபராதம் விதிக்க முடியும்.

இந்தப் புதிய சட்டம், அதிகாரிகளுக்கு போதுமான அதிகாரத்தை வழங்குவதோடு, நகர்ப்புற திட்டமிடுதல் துறையில் நிலவும் ஊழல்களையும் களைய உதவும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், ஐதராபாத் நகரில் இருக்கும் 22 லட்சம் கட்டடங்களில், குறைந்தபட்சம் 50% கட்டடங்கள் விதிமீறல் உள்ளவையாகவும், 10% சட்டவிரோதமானவையாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றன.

மேலும், விதிமீறல் மற்றும் சட்டவிரோத கட்டடங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ரகசியமாக புகார் கொடுக்கவும் இந்த சட்டம் ஊக்குவிக்கிறது. புகார்தாரர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.