புதுடெல்லி: மாணாக்கர்களின் கல்விக் கடன் பற்றி காங்கிரஸ் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பற்றி பதிலளித்தார் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்.

காங்கிரஸ் உறுப்பினர் ரன்ஜிப் பிஸ்வால், “மாணாக்கர்கள் கல்விக் கடனை செலுத்துவதற்கு முன்னால், வேலை கிடைக்கும் வரை காத்திருக்க, தன்னாட்சி கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் சுயநிதிப் பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா?” என்று துணைநிலைக் கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் போக்ரியால், “இந்தக் கேள்வி கல்வி நிறுவனங்களின் தன்னாட்சிப் பற்றியது. தங்களின் தன்னாட்சியைப் பயன்படுத்தி, புதியப் படிப்புகளைத் தொடங்கி, அதிக கட்டணம் வ‍சூலிப்பது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால், கல்வி நிறுவனங்கள் வளரத் தவறி விடுகின்றன என்று அடிக்கடி கூறப்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கென்று நாம் தனியான விதிமுறைகளை வைத்துள்ளோம். தமக்கென தனியான திறன்கொண்ட கல்வி நிறுவனங்கள் தன்னாட்சிக்காக விண்ணப்பிக்கின்றன. பின்னர் யுஜிசி தனது ஆய்வாளர் குழுவை அனுப்புகிறது” என்று பதிலளித்துக் கொண்டிருந்தார் அமைச்சர்.

இதைக்கேட்ட பல உறுப்பினர்கள், அமைச்சரின் பதிலுக்கும், காங்கிரஸ் உறுப்பினரின் கேள்விக்கும் தொடர்பேயில்லை என்று ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், தான் உறுப்பினரின் கேள்விக்குத்தான் பதிலளிக்கிறேன் என்று தெரிவித்தார் அமைச்சர்.

இதை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சுட்டிக்காட்டியப் பிறகும்கூட அமைச்சர் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்விக் கடன் பற்றி கேள்வி எழுப்பிய உறுப்பினருக்கு கிடைத்த பதில் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சிப் பற்றியது.