புதுடெல்லி: உத்ரகாண்ட் மாநிலத்தில் பாயும் கருட் கங்கா நதி நீரைப் பருகினால், கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் இல்லாமல் சுகப் பிரசவத்தில் குழந்தைப் பெறலாம் என்று மக்களவையில் பேசியுள்ளார் பாரதீய ஜனதா உறுப்பினரும், அக்கட்சியின் உத்ரகாண்ட் மாநில தலைவருமான அஜய் பட்.

மக்களவையில் அவர் பேசியதாவது, “கருட் கங்கா நதியின் மருத்துவ குணங்கள் குறித்து வெகுசிலரே அறிந்து வைத்துள்ளார்கள். பாம்புக் கடித்த இடத்தில், அந்த நதியிலிருந்து எடுத்த கல்லை வைத்து தேய்த்தால் உயிர் பிழைத்துவிட முடியும்.

அந்த நதியின் கற்கள் பாம்புகளுக்கு சுத்தமாக ஆகாதவை. இந்தப் புனித நதியின் நீரை ஒரு கோப்பை அளவிற்கு பருகினால், கர்ப்பிணிப் பெண்களுக்கான உடல்நல சிக்கல்கள் தீரும்.

கருட் கங்கா நதியின் கல்லை தேயுங்கள். அதை அந்த நதியின் தண்ணீரில் கலந்து, ஒரு கோப்பை நீரை கர்ப்பிணி பெண்களைப் பருக வைத்தால், அவர்களுக்கு சிசேரியன் செய்ய வேண்டிய தேவையே இருக்காது” என்று பேசினார்.