புதுடெல்லி: நாம் குரங்குகளின் குழந்தைகள் அல்ல எனவும், முனிவர்களின் பிள்ளைகள் எனவும் கூறியுள்ளார் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபால் சிங்.

மேலும், இந்தியப் பண்பாடு எப்போதுமே மனித உரிமைகள் குறித்துப் பேசியதில்லை; மாறாக, மனித குணாம்சங்களை மேம்படுத்திக் கொள்வது குறித்தே பேசிவந்துள்ளது என்றும் கூறியுள்ளார் அவர்.

மக்களவையில் அவர் பேசியதாவது, “இயற்கையின் சிறப்புவாய்ந்த படைப்புதான் மனிதர்கள். நாம், முனிவர்களின் குழந்தைகள் என்றே நினைக்கிறோம். அதேசமயம், நாம் குரங்கின் குழந்தைகள் என்று நம்புவோரின் மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை.

கோயிலுக்கோ, தேவாலயத்திற்கோ அல்லது மசூதிக்கோ சென்றால் மட்டுமே அனைத்தும் பூர்த்தியாகி விடுவதில்லை. நம்மிடம் பிறர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோமோ, அப்படியே நாம் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும்.

பிறர் நம்மை தொந்தரவு செய்யக்கூடாது என்று நாம் நினைத்தால், நாம் பிறரை தொந்தரவு செய்யக்கூடாது. அதுதான் உண்மையான மதம். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும் சுகமாகவும் இருக்க வேண்டுமென்று சொல்கிறது நமது மதம். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் நண்பர்களாக பார்க்கப்பட வேண்டும்” என்றார்.