அமராவதி:

ரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின், அமராவதி திட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது நிதிஉதவி வழங்கி வந்த  உலகவங்கி, தற்போது திடீரென நிதியை நிறுத்தியுள்ளது.

இதன் காரணமாக தற்போதைய மாநில முதல்வர் ஜெகன் மோகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தார். அதையடுத்து மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது, அமராவதி என்ற இடத்தில் ஆந்திராவின் தலைநகர் கட்டமைப்பதற்கு உலக வங்கி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்து இருந்தது.  மேலும், அமராவதி திட்டத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி 200 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சம்மதித்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அமராவதி நகரை கட்டமைக்கும் திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதை உலக வங்கி திடீரென கைவிட்டுள்ளது.  இது தற்போதைய முதல்வர் ஜெகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, அமராவதி நகர் கட்டமைக்கும் திட்டம் என்னவாகும் என்று கேள்விக்குறியாகி உள்ளது. தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதி திட்டத்தை செயல்படுத்த  மாற்று ஏற்பாடு செய்வாரா அல்லது அமராவதி திட்டத்தை கைவிடுவாரா என்பது குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வு ஆந்திர அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், மத்தியஅரசின் அழுத்தம் காரணமாகவே உலக வங்கி நிதி உதவியை நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.