டில்லி

த்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் திருணாமூல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கு வங்க ஆளுநர் மீது புகார் அளித்துள்ளனர்.

திருணாமூல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர் கொண்ட குழு அந்தக் கட்சியின் பாராளுமன்ற தலைவர் டெரக் ஓ பிரெயின் தலைமையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.   அப்போது அவர்கள் மேற்கு வங்க ஆளுனர் கேசரி நாத் திரிபாதி மீது புகார் தெரிவித்துள்ளனர்.   தங்கள் புகாரை அவர்கள் எழுத்து பூர்வமாக அளித்துள்ளனர்.

ராஜ்நாத் சிங் உடன் டெரெக் ஓ பிரெயின்

அந்த புகாரில், “மேற்கு வங்க ஆளுனர் மாவட்ட ஆட்சியாளர்களுடன் நேரடியாக தகவல்கள் கேட்டு வருகிறார்.    மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து பல விவரங்கள் கேட்டு வருகிறார்.   அரசின் செயல்பாடுகள், மற்றும் மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் தற்போதைய நிலை,  எல்லைப் பகுதிகளில் உள்ள சட்ட ஒழுங்கு நிலை ஆகியவை பற்றி பல தகவல்களை அவர் நேரடியாக கேட்டுள்ளார்.

இந்த சந்திப்புக்கள் பற்றி மாநில அரசுக்கு அவர் எதுவும் தெரிவிப்பதில்லை.  சட்டம், ஒழுங்கு போன்ற மாநில விவகாரங்கள் முழுக்க முழுக்க  மாநில அரசின் முடிவுப்படி நடக்க வேண்டியவை ஆகும்.   ஆனால் அவர் மாநில நிர்வாகத்தை மீறி நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது உரிமை மீறிய செயலாகும்.    ஆளுனர் இவ்வாறு மாநில விவகாரங்களில் குறுக்கிடுவது மாநிலத்தின் இறையாண்மைக்கு அவர் விடுக்கும் மிரட்டல் எனவே தோன்றுகிறாது.”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவர்னரின் நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக ஏற்கனவே திருணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.