டில்லி:

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் முரண்டு பிடித்து வருகிறது. பட்ஜெட்டிற்கு முன்பே இந்த கூட்டணியில் சற்று விரிசல் ஏற்பட்டது. எனினும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று நம்பிக்கையில், தெலுங்கு தேசம் கூட்டணி முறிவு குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. ஆனால், பட்ஜெட்டில் எதிர்பார்த்தபடி ஆந்திரா மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இது தெலுங்கு தேசத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உடனடியாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக.வுக்கு குடைச்சல் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதிக நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும் நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்க அக்கட்சியினர் முடிவு செய்தனர். இந்த வகையில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேச எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இவர்களுடன் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களும் சேர்ந்து கொண்டனர்.

சந்திரபாபு நாயுடு துபாயில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று சென்றிருந்தார். அங்கிருந்து டெலி கான்பரன்ஸ் மூலம் தெலுங்கு தேச எம்.பி.க்களிடம் பேசிய அவர், ‘‘தொடர்ந்து அமளியில் ஈடுபட வேண்டும். அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பு வெளியாகும் வரை தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும். நாம் யாருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை’’ என்று தெரிவித்தார்.

தெலுங்கு தேச எம்.பி.க்கள் அமளி காரணமாக லோக்சபா நேற்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக சந்திரபாபு நாயுடுவை சமாதானப்படுத்தும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடுவுடன் போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று ஆந்திராவில் முழு அழைப்புக்கு எதிர்கட்சிகள் அழைப்பு வி டுத்துள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு எந்தவித அசவுகர்யமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அதிகாரிகளுக்கு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் இத்தகைய செயல்பாட்டால் மாநில பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மக்களுக்காக பேசாமல் தெலுங்கு தேச தலைவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மூத்த தலைவர் சோமு வீரராஜூ தெரிவித்தார்.