திருச்சி: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மூளையான செயல்பட்ட, பிரபல கொள்ளையன் முருகன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த ஆண்டு (2019)  அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.  இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸாரிடம் சிக்கிய மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்தக் கொள்ளையில் திருவாரூர் முருகனின் மாஸ்டர் பிளான் இருப்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

இந்த சம்பவத்தில், திருவாரூரைச் சேர்ந்த முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ், கணேசன் ஆகியோர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. இதே கும்பல் திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையடித்தது தெரிய வர திருச்சி தனிப்படை காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடினர். கொள்ளை தொடர்பாக  முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை, கொள்ளையடிக்கப்பட்ட சுமார்  4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.

இந்த நிலையில், முக்கிய கொள்ளையர்களான சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரூ நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களிடமிருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களுரூ, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.

மருத்துவர்கள் அவருக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்திருந்தனர். அவருடைய இடது கை, கால் வாதநோயால் செயல்படாமல் போய்விட்டது. வாய்பேச முடியாத நிலையில் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வந்த முருகன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11 மணி அளவில் இறந்து விட்டார்.

இதனைத்தொடர்ந்து இன்று மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பிறகு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு முருகனின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பெங்களூர் போலீசார்  தெரிவித்து உள்ளது.

இறந்த கொள்ளையன் முருகன் மீது சென்னையில் 12 வழக்குகளும், கர்நாடகாவில் 46 வழக்குகளும், ஆந்திராவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.