டெல்லி: தலைநர் டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 306 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர். மேலும் புதியதாக 26,169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தலைநகரின்  மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான  டெல்லி  கங்காராம் மருத்துவமனையில் மட்டும்  நேற்று 25 நோயாளிகள் பலியானதாகவும்,  60 நோயாளி கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில் மரணமடையும் நோயாளிகளை பெறுவதிலும் கடும் சிக்கல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க  போதுமான வசதிகள் கிடைக்காத நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. தலைநகர் டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, பலியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் தற்போதைய நிலையில், 91,618 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், நூற்றுக்கணக்கானோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை என்றே குற்றம் சாட்டப்படுகிறது.

தலைநகரின் இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனையான கங்காரம் மருத்துவமனையில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நோயாளிகளின் மரணம் அதிகரித்து வருகிறது. மேலும்,   முக்கிய 5 மருத்துவமனைகளுக்கு கொரோனா பாதிப்பு நோயாளிகளை கொண்டு சென்றும் ஒரு மருத்துவமனையில் கூட படுக்கை வசதி இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது.  பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, புது நோயாளிகளுக்கு இடமில்லை.‘ அதிகாரிகள் நிலைமைகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஜிடிபி மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டில் ஸ்ட்ரெச்சர்கள் இரு மடங்கு அதிகமாகி இருப்பதாகவும், படுக்கை கிடைக்காத நிலையில், ஸ்டெச்சரிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்,  சில படுக்கைகள் ஒன்றுக்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் நிரம்பி வழிவதாகவும்,  வாசலில் வரிசைகட்டி நோயாளிகள் காத்துக் கிடப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர இறந்தோர் உடலைப் பெற முடியாமல் உறவினர்கள் 15-18 மணி நேரம் ஜிடிபி மருத்துவமனை பிணவறை வாசலில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து கூறிய அந்த மருத்துவமனையின் செக்யூரிட்டி, 40 முதல் 50 பேர் பலியாக வருகின்றனர். அவர்களின் உடலை பாதுகாப்பாக  பேக் செய்து கொடுக்கவே பல மணி நேரங்கள் ஆகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.  ஆனந்த் விஹார் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, கர்கர்டூமாவின் சாந்தி முகாண்ட் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் நிறுவனமான ஐனாக்ஸிலிருந்து 2,300 கிலோ திரவ ஆக்ஸிஜனை காவல்துறையினரின் வாகனத்தில் எடுத்து வந்து வழங்கியது. இதனால்  சுமார் 110 தீவிர கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுஉள்ளது.

மேலும், இந்திய ராணுவமும்  டிஆர்டிஓவுடன் இணைந்து, டெல்லி கான்ட்டில் 250 படுக்கைகள் கொண்ட பிரத்யேக கோவிட் ஐசியு வசதியை அமைத்துள்ளன. ஐ.சி.யூ ஆதரவு தேவைப்படும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட அனைத்து நோயாளிகளும் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரிகளால் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.