ஸ்ரீரங்கம்

இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தமது முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்துள்ளனர்.

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை முன்னோர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.   இந்த நாட்களில் ஆறுகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது.   இன்று தை அமாவாசை தினம் ஆகும்.   எனவே இன்று தமிழகம் எங்கும் ஏராளமானோர் ஆறு மற்றும் குளங்களுக்குச் சென்று நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து  வருகின்றனர்.

திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் காவிரி ஆற்றில் நீராடி பின்னர் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அத்துடன் அய்யாளம்மன் படித்துறை, முசிறி காவிரி படித்துறை, முக்கொம்பு காவிரி ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை மற்றும் தேவிப்பட்டினம் கடற்கரை பகுதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், அக்னி தீர்த்தக் கரையில் தீர்த்தமாடி இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து அருகில் உள்ள ஜெயவீர ஆஞ்சிநேயர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். ஆயினும் இங்கு வழக்கத்தைவிடக் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.  இந்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி நெல்லை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் தாமிரபரணி ஆற்றங்கரையில் குவிந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.

கன்யாகுமரியில் 16 வகை தீர்த்தங்களைக் கொண்ட முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாகப் பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் புனித நீராடினர். இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

அத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து விரதம் மேற்கொண்டனர்.

இதைப்போல் மதுரை வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்து முன்னோர்களுக்கு வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்து வருகின்றனர் இங்கு தர்ப்பணம் செய்வது காசி நிகரானது என்பது நம்பிக்கை ஆகும்.