சென்னை

மிழகத்தில் பண்ணை வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழக முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக முஸ்லிம் லீக் தலைவர் வி எம் எஸ் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்திக் கொண்டு இருப்பதால் இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. வருகிற 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி மெரினா கடற்கரையில் ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாகப் புத்தாண்டையொட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டும். கொரோனா பரவலால் பண்ணை வீடுகளிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு நடைபெறவில்லை.

தற்போது மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்ணை வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

தமிழக அரசு நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விரைந்து தடை விதிக்க வேண்டும். அந்தத் தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்காவது நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கக் குழு அமைத்து தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.