சென்னை

நிதி நிலை சீரான பிறகு தமிழக அரசு ஊழியர்கள் கேட்காமலேயே அவர்கள் கோரிக்களை அரசு நிறைவேற்றும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

நேற்று தமிழக அரசு ஊழியர்கள் சங்க 14 ஆம் ஆம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடந்தது.   இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.  மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி உள்ளார்.  அவருடைய உரையின் முக்கிய விவரங்கள் வருமாறு :

முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகிறது.  ஆறு மாதத்துக்குள் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செய்து தரப்பட்டுள்ளன.தற்போது கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து நடைமுறையில் உள்ள தெளிவின்மையைச் சரிசெய்யும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை அரசுப்  பள்ளிகளில்  அதிகரித்துள்ளதால் மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் தற்போதைய நிலைமையை நீங்கள் உணர வேண்டும். நாம் ரூ.5 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம்.  தமிழகத்தின்  நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்போது நீங்கள் கேட்காமலேயே உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயமாக அரசு நிறைவேற்றித் தரும். தமிழக அரசு கஜானாவுக்கு வரவேண்டியதில் மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி. மத்திய அரசு அதை மொத்தமாக மத்திய அரசு பறித்துவிட்டது.

மாநிலங்கள் நிதி நிலைமையைப் பொருத்தவரை மத்திய அரசிடம் கொத்தடிமை முறைபோல கையேந்தும் நிலைமையில்தான் இருக்கின்றன. நமக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி முதல் வெள்ள நிவாரண நிதி வரை நிதிகளே முழுமையாகத் தரப்படுவது இல்லை. அவ்வாறு தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை.” என தெரிவித்துள்ளார்.