திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அமாவாசை நாள் என்பதாலும், வைகுண்ட ஏகாதேசி தொடக்க நிகழ்ச்சியாக திருநெடுந்தாண்டவம் நிகழ்வு தொடக்கம் இன்று மாலை தொடங்க உள்ளதாலும் வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகாலை முதலே வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில், கோயிலுக்குள் குழுவாக வந்த ஆந்திராவைச் சேர்ந்த 34க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு கட்டுப்பாடின்றி முண்டியடித்துக் கொண்டு மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டனர்.

இதனை அங்கிருந்த பாதுகாவலர்கள் கண்டித்ததை அடுத்து குழுவாக வந்த ஆந்திர பக்தர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதலாக உருவானதில் ஆந்திர மாநிலத்தில் வந்திருந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் சொட்டியது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கோயிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளிடம் இருதரப்பினரும் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.

ஆந்திராவில் இருந்து வந்த பக்தர்கள் அங்கிருந்த பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை சேதப்படுத்தியும் பாதுகாவலரின் தலைமுடியைப் பிடித்து உண்டியல் மீது மோதியும் ரகளையில் ஈடுபட்டனர்.

மற்ற பக்தர்களை தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது தவறு இல்லை என்று விளக்கமளித்துள்ளது.

சமீபகாலமாக கோயிலுக்குள் முண்டியடித்துக் கொண்டு மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கட்டுப்பாடின்றி செயல்படுவதும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ள ஊழியர்கள் இதனை கண்டிக்கும் பட்சத்தில் ஊழியர்களை தாக்க முற்படுவதுடன் அந்த விவகாரத்தை பெரிதாக்கி அரசியல் லாபம் பெற துடிப்பதும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலும் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் இதுபோன்ற மத மற்றும் கடவுள் நம்பிக்கையில் அரசியல் சாயம் பூச நினைப்பது மக்களின் மனதில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கோயிலுக்கு பொதுவாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.