திருவனந்தபுரம்

தம்மை ஆள் வைத்துத்  தாக்கக் கேரள முதல்வர் சதி செய்வதாக அம்மாநில ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

வெகுநாட்களாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நிர்வாக ரீதியிலான உறவு சீராக இல்லை. இருவருமே ஒருவர் மீது ஒருவர் ஏதேனும் குறை சொல்லி வருவது வழக்கமாகி உள்ளது.

நேற்று டில்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஆளுநர் சென்றுகொண்டிருந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் துணை அமைப்புகளில் ஒன்றான எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த சிலர், அவரது காரை வழிமறித்தனர்.மேலும் அவ்ர்கள் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர்.

ஆளுநர் ஆரிப் முகமது கான், காரை விட்டு இறங்கி, போராட்டக்காரர்களை கிரிமினல் என திட்டினார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம்,

“கேரளாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இங்குக் குண்டர்களின் ஆட்சி நடக்கிறது. என்னைத் தாக்குவதற்குச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் பினராயி விஜயன் உடந்தையாக இருக்கிறார். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்காது. முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக இதேபோல போராட்டம் நடத்த முடியுமா? இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”

என்று கூறினார்.

காவல்துறை தரப்பில் , ஆளுநரின் வாகனம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்களால் தடுக்கப்பட்டது என்றும் இது தொடர்பாக எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநில அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.