சென்னை: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை, தேசிய வெப்ப ஆற்றல் கழகத்திடம்(NTPC) விரைவில் மேற்கொள்ளவுள்ளது தமிழக அரசு.

உத்திரப்பிரதேச மாநில வாரணாசியில் உள்ள கர்சாடா பிளான்டில், என்டிபிசி மேற்கொண்ட குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் முழு வெற்றிபெற்ற நிலையில், அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது தமிழக அரசு. வாரணாசி மாநகராட்சியில் சேரும் திடக்கழிவுகளை வைத்தே இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக உள்ளாட்சித்துறை மற்றும் தண்ணீர் விநியோகத் துறை அமைச்சர் வேலுமணி கூறியதாவது, “தமிழகத்திலுள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் ஆகியவற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 7011 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளும், 6733 மெட்ரிக் டன் மக்காத குப்பைகளும் உற்பத்தியாகின்றன.

எனவே, என்டிபிசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பிளான்ட்டுகள் அமைக்கப்படும். பொருத்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த பிளான்ட்டுகள் அமைக்கப்படும்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற நகரங்களில், நடுத்தர அளவிலான யூனிட்டுகளை, அவர்களின் சொந்த செலவிலேயே அமைக்க என்டிபிசி ஆர்வமாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட திடக் குப்பைகள் சோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 400 டன் திடக் குப்பைகளும், அதிகபட்சம் 1000 டன் திடக் குப்பைகளும் இத்திட்டத்திற்கு தேவைப்படும்” என்றார் அமைச்சர்.