அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்,  கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்.

பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது,” என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால்தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமையடைகிறாள் என்றும் சொன்னார்.

இருவருக்கும் இதுகுறித்து வாதம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்னையாகி, பிரம்மனும் சரஸ்வதியும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் இருவரும் பூலோகத்தில் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு, பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கேற்ற வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. 

சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். தம்பதிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை உலகத்தின் முன்னால் அவர்கள் நடத்திக்காட்டினர். 

பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி,”இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாகக் கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு” என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள். 

தமிழகத்தில் சரஸ்வதிக்கென மிகப்பெரிய தனிக்கோயில் கூத்தனூர் மட்டுமே. பிரம்மாவுக்கு அதிகமாக கோயில்கள் அமையாததால் அவரது மனைவியான சரஸ்வதிக்கும் இந்தியாவில் அதிக கோயில்கள் அமையாதது இயற்கையே. கூத்தனூர் சரஸ்வதி கோயிலிலும் பிரம்மாவுக்கு சிலை இல்லை. 

இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் “கூத்தனூர்‘ ஆனது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோயிலைக் கட்டினார் என்று தலபுராணம் சொல்கிறது. 

இவ்வூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். அதன் காரணமாகவே அவர் புகழ் பெற்ற கவிஞராக முடிந்தது என்கிறார்கள். இக்கோயில் ஒற்றைப் பிரகாரத்தைக் கொண்டது. ராஜகோபுரம் இருக்கிறது. பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி உள்ளனர். ஒட்டக்கூத்தருக்கு சிலை இருக்கிறது. சரஸ்வதியின் முன்னால் அன்ன வாகனம் உள்ளது. இதில் நர்த்தன விநாயகர், சுயம்புமூர்த்தியாக இருக்கிறார்.

சரஸ்வதி சிலை அமைப்பு:

மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சரமாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள்.

ஜடாமுடியும், கருணைபுரியும் இருவிழிகளும், “ஞானச்சஸ்‘ என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். 

திருவிழா:

புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி 12 நாட்களுக்கு பின் 10 நாள் ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்குரிய பவுர்ணமி மூல நட்சத்திரத்தில் மாதம் தோறும் சிறப்பு பூஜைகளும், ஆண்டு தோறும் தமிழ் வருடப்பிறப்பிலிருந்து 45 நாட்களுக்கு லட்சார்ச்சனையும் நடக்கிறது.