திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ரூ. 2.5 லட்சம் கோடி சொத்து உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் கோயிலுக்கு வழங்கும் காணிக்கையை திருப்பதி தேவஸ்தானம் அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க இதனை வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள திருப்பதி தேவஸ்தானம் 15,938 கோடி ரூபாயை 24 வங்கிகளில் வைப்பு நிதியாக வைத்துள்ளதாகவும் தவிர ரூ. 5,300 கோடி பெறுமானமுள்ள 10.25 டன் தங்கத்தையும் வங்கி பாதுகாப்பில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிடுவது இது முதல் முறை என்று கூறப்படுகிறது. இதில் நாடு முழுக்க 900 எண்ணிக்கையிலான சுமார் 7000 ஏக்கர் நிலம் திருப்பதி பாலாஜிக்கு சொந்தமாக இருப்பது தெரியவந்துள்ளது.

2019 ம் ஆண்டு 7.3 டன்னாக இருந்த தங்கம் கையிருப்பு தற்போது 10.25 டன்னாக அதிகரித்துள்ளது. இதில் 9.8 டன் பாரத ஸ்டேட் வங்கியிலும் மீதமுள்ள தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதுபோல் தற்போது 15,938 கோடி ரூபாயாக உள்ள வாய்ப்பு நிதி 2019 முதல் கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 2913 கோடி அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி நடவடிக்கைக்கு ஆளாகாத அதிக வட்டி தரும் வங்கிகளிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டு இந்த ரொக்கம் மற்றும் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

திருமலையில் வைக்கப்பட்டுள்ள புராதன கலைப்பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் அங்குள்ள தங்குமிடங்கள் ஆகியவை நீங்கலாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரும் நிறுவனங்களான விப்ரோ, அல்ட்ரா டெக் சிமெண்ட் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகியவற்றின் சந்தை மதிப்பைவிட திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.

2022 – 23 ல் வட்டியாக கிடைக்கும் ரூ. 668 கோடி மற்றும் உண்டியல் வருமானமாக எதிர்பார்க்கடும் ரூ. 1000 கோடி தவிர இதர வருமானம் ஆகியவற்றை சேர்த்து தேவஸ்தான செலவினத்திற்கு ரூ. 3100 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது.