குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்திற்காக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 20 வரை மூன்று கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே பல இடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளாமல் கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்ததாகவும் மேலும் பல இடங்களில் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளாமல் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பரிசீலனைக்குப் பின் 1.065 கோடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளும் வகையில் செப்டம்பர் 18 ம் தேதி அவர்கள் அளித்திருக்கும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விண்ணப்பதாரரின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி செப்டம்பர் 18 ம் தேதி அனுப்பிவைக்கப்படும்.

குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்” என்று அந்த குறிப்பில் தெரிவித்துள்ளது.